போக்குவரத்து கட்டுப்பாடு வரையறையுடனே தளர்த்தப்படவுள்ளது. இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு, நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இதன்போது வரையறையுடனே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. இந்நிலையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிறுபத்திற்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
இந்நிலையில் , இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கண்காணிப்பதற்காக பொலிஸ் சோதனைச்சாவடிகள் , நடமாடும் கண்காணிப்பு பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு பிரிவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சிவில் மற்றும் சீருடையிலும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படமாட்டாது. இதன்போது அத்தியாவசிய சேவை மற்றும் விசேட காரணிகளுக்கு மாத்திரமே மாகாணங்களை கடந்து செல்ல முடியும். இது தொடர்பில் கண்காணிப்பதற்காக அனைத்து மாகாண எல்லைப் பகுதிகளிலும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்போது விநோத மற்றும் விசேட சுற்றுலா பயணங்கள் , யாத்திரைகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.மேலும் விருந்துபசாரங்கள் , கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் மக்கள் ஒன்றுக் கூடல்கள் என்பவற்றையும் நடத்த முடியாது. இதேவேளை ,பொது இடங்களில் ஒன்றுக் கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது. எனினும் மாகாணங்களுக்குள் பொது போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறும். இதன்போது பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் இருக்கையின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் செல்ல வேண்டும்.
இதேவேளை,பயணிகள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியே பேணுவதற்கு நடடிக்கை எடுத்திருப்பதுடன் , கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதற்கு புறம்பாக செயற்படும் பொது போக்குவரத்து சாதனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றின் உரிமையாளர் , சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர், மீண்டும் செயற்பட ஆரம்பிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , சேவை நிலையங்கள் , வர்த்தக நிலையங்கள் சுகாதார சட்டவிதிகளுக்கு அமையவே செயற்பட வேண்டும். இதன்போது சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கான வசதிகள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் நிறுவனங்கள் தமக்கு மிகவும் அவசியமான ஊழியர்களை மாத்திரவே பணிக்கு அழைக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிபுரியக் கூடிய வசதிகள் இருப்பின் , அதற்கமைய அதனை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் , அவற்றின் உரிமையாளர் , முகாமையாளர், பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகப்பிரிவினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.