கொழும்பு கப்பல் தீ விபத்து : ரூ.300 கோடி இழப்பீடு கேட்கிறது, இலங்கை
13 Jun,2021
குஜராத்தில் இருந்து நைட்ரிக் அமிலம் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்று கொண்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த ‘எக்ஸ்-பிரஸ் பியர்ல்’ என்ற கப்பல், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்தது.
இந்த கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் மீட்கப்பட்டதுடன், கப்பலில் பிடித்த தீயும் அணைக்கப்பட்டது. ஆனாலும் கப்பல் முற்றிலும் சேதமடைந்து பாதி மூழ்கிய நிலையில் உள்ளது. அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் கடலில் கலந்து சூழியலை மோசமாக பாதித்து இருக்கிறது. இதனால் அப்பகுதியில் மீன்பிடிக்க தடையும் விதிக்க வேண்டியதாயிற்று. இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடும் பணிகளும் நடந்து வருகிறது.
இலங்கை வரலாற்றில் மிகுந்த மோசமான சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக கப்பலின் உரிமையாளர்களிடம் மிகப்பெரும் தொகையை இழப்பீடாக இலங்கை கேட்டுள்ளது.
குறிப்பாக 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.300 கோடி) இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என அட்டார்னி ஜெனரல் மூலம் கப்பல் உரிமையாளர்களை இலங்கை கேட்டுள்ளது.