கடலில் வேகமாக பரவும் X-Press Pearl கப்பலின் எண்ணெய் கசிவு செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிவந்தது அறிக்கை!
10 Jun,2021
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்த MVXPress pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கடல்சார் மாசுபாட்டை கண்காணிக்கும் கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை ( marine pollution surveillance report) சுட்டிக்காட்டுகிறது.
கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் சில செயற்கைக்கோள் படங்களை இந்த அறிக்கை பயன்படுத்துகிறது.
சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெயின் கறை பரவியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
காற்றின் வேகம் அதிகரிக்கும் போது இது மேலும் பரவக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கப்பல் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி சுமார் 12 கடல் மைல் வரை இந்த எண்ணெய் பரவக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கப்பல் அமைந்திருந்த இடத்திலிருந்து எண்ணெய் மெது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு வரை 3 கடல் மைல் வரை பரவியுள்ளது. எனினும் இப்பகுதியில் நிலவும் காற்றின் வேகம் காரணமாக அது அவ்வப்போது மாறுகிறது என்றும் அது கூறுகிறது.
குறித்த கப்பலின் எண்ணெய் கடலில் கலப்பது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதேவேளை சுமார் 300 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலில் இருந்துள்ளதாக தகவல் வெளிவந்திருந்தன.
எண்ணெய் பரவ ஆரம்பித்தால், இரசாயனம் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் காலநிலை காரணமாக அதனை செய்ய முடியாமற்போனால், கடற்கரையை சுத்தம் செய்ய நேரிடும் எனவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.