பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது, அபராதமும் விதிக்கப்படும் –
09 Jun,2021
பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்றும் பொலிஸ் அறிவித்துள்ளது.
தண்டனைச் சட்டம், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் பிரிவு 3, கணினி குற்றச் சட்டத்தின் பிரிவு 06, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 02 மற்றும் 03, 1979 ஆம் ஆண்டின் 48, மற்றும் 1927 ஆம் ஆண்டின் 04 என்ற ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
சமூக ஊடகளில் தவறான செய்திகளை பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசேட அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஒரு நாட்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலியான செய்திகளை பகிர்ந்தமைக்காக அண்மையில் கைது செய்யப்பட்ட ஒருவர், குறித்த தண்டனை சட்டக்கோவைக்கு அமைய கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி செய்தி பகிர்விற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு புதிய பிரிவு அமைக்கப்படும் என்ற பொலிஸாரின் அறிவிப்பிற்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த த நடவடிக்கை ஆபத்தானது மற்றும் அரசியல் ரீதியாக ஆரோக்கியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.