யாழ்ப்பாணம்- நல்லூர், அரசடி பகுதியில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி கடந்த மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசிக்கும் 156 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நேற்று 95 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து ஏறாவூரைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரு பெண்களும், வயதுடைய பெண் ஒருவரும், வாழைச்சேனையை சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரும், மட்டக்களப்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் உட்பட 95 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 50ஆக அதிகரித்துள்ளது.