ஊரடங்குக்கு இடையே கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறப்பு - இந்தியர்களுக்கு தடை நீடிக்கிறது
02 Jun,2021
ஊரடங்குக்கு இடையே கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்களுக்கு தடை தொடர்கிறது.
இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 30-ந் தேதிவரை கொரோனா பலி எண்ணிக்கை 678 ஆக இருந்தது. ஆனால், மே மாத இறுதிக்குள் ஒரே மாதத்தில் 750-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், கடந்த மே 21-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கொழும்பு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
ஊரடங்கு ஜூன் 7-ந் தேதிவரை அமலில் உள்ளது. இருப்பினும், ஊரடங்குக்கு இடையே கொழும்பு சர்வதேச விமான நிலையம் நேற்று போக்குவரத்துக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது. 75 பயணிகள்வரை பயணிக்கும் விமானங்கள் மட்டும் தரை இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2 மணியளவில், தோஹாவில் இருந்து வந்த கத்தார் ஏர்ைலன்ஸ் விமானம், முதல் விமானமாக தரை இறங்கியது. அதில் 53 பயணிகள் இருந்தனர். நேற்று மதியம் வரை, மொத்தம் 6 விமானங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் 569 பயணிகள் வந்தனர்.
உள்நாட்டு பயணிகள், வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் பி.சி.ஆர். கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சைக்கும், மற்றவர்கள் 14 நாள் கட்டாய தனிமைக்கும் அனுப்பப்பட்டனர்.
விமான நிலையம் திறக்கப்பட்ட போதிலும், இந்தியர்களுக்கும், வியட்நாம் மக்களுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடருகிறது.
அவர்களுக்கு மட்டுமின்றி, கடந்த 14 நாட்களில் இந்தியா மற்றும் வியட்நாமில் தங்கியிருந்தவர்களுக்கும் கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கிடையாது. அங்கு தங்கியிருந்த இலங்கை மக்களுக்கும் இது பொருந்தும். இந்தியா, வியட்நாம் விமான நிலையங்கள் வழியாக பயணம் செய்தவர்களுக்கும் இத்தடை பொருந்தும்.