இலங்கையின் இளவரசி’- சீனாவின் அறிவிப்பால் புதிய சர்ச்சை!
29 May,2021
இலங்கையின் புராணக் கதைகளில்படி, 15 வது நூற்றாண்டை சேர்ந்த சிங்கள இளவரசன் ஒருவன் சீன பெண்ணை திருமணம் செய்துகொண்டு சீனாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இளவரசனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் இந்த இளவரசி என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது
இலங்கையைச் சேர்ந்த இளவரசி ஒருவர் சீனாவில் இருப்பதாக வெளியான தகவல் சிங்களர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துவரும் சீனா, கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சுயாட்சி பிரதேசத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் சாலை திட்டங்கள் தொடர்பான செய்தி, ஆய்வு ஆகியவற்றை வெளியிட்டு வரும் BRISL ட்விட்டர் பக்கத்தில் மே 28ம் தேதி புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 பரம்பரையை சேர்ந்த இளவரசி சூ ஷி யின், பீஜிங் நகரில் உள்ள தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் புராணக் கதைகளில்படி, 15 வது நூற்றாண்டை சேர்ந்த சிங்கள இளவரசன் ஒருவன் சீன பெண்ணை திருமணம் செய்துகொண்டு சீனாவிலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இளவரசனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் இந்த இளவரசி என்று சீனா தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை ஏற்க மறுத்து சிங்களர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சீனாவின் இந்த தகவல் பொய்யானது என வரலாற்று ஆய்வாளரான பிலிப் ஃபெட்ரிக் தெரிவித்துள்ளார்.மகாவம்ச மற்றும் சிங்கள வம்சங்கள் குறித்த குறிப்புகள் பரக்ரமபாஹு ஆறாம் அரச குடும்பத்தின் தெளிவான வம்சாவளியை வழங்கவில்லை. இந்த முழு காலமும் வரலாற்று குழப்பம் நிறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் இந்த கூற்றுக்கு பின்னணி என்ன என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக இலங்கை அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.