எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து
29 May,2021
இலங்கைக் கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் உள்ள இரசாயன பொருள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துல்லியமான தகவல்கள் கிடைக்கும் வரை இரசாயனத்தின் சரியான விளக்கத்தை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டாக்டர் டர்னி பிரதீப்குமார கூறுகையில்,“கப்பலில் இருந்து சிதறடிக்கப்பட்ட இரசாயன சரக்குகளின் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்து உள்ளது” என்றார்.
“வேதியியல் பொருட்களால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்த நேரத்தில் எந்தவொரு திட்டவட்டமான அறிக்கையும் வெளியிட முடியாது” என்று விலங்கியல் மூத்த பேராசிரியர் எம்.பத்மலால் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், வழக்கறிஞர் தர்ஷனி லஹந்தபுர,
“கப்பலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது வாழ்நாளில் காணக்கூடிய மிகப்பெரிய சேதமாகும்” என்று கூறினார்.
இதேவேளை, கப்பலில் மேலும் எரிபொருள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன தெரிவித்தார்.