கொரோனா 3-வது அலை - இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை
21 May,2021
தீவு நாடான இலங்கையில், கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு சர்வதேச எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளை தடை செய்து நேற்று உத்தரவு வெளியாகி உள்ளது. இதன்படி சர்வதேச விமான நிலையங்கள் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறது. மே 21 முதல் மே 31 வரை இந்த தடை அமலில் இருக்கும். அதே நேரத்தில் சரக்கு மற்றும் மனிதாபிமான சேவைக்காக இயக்கப்படும் விமானங்களுக்கு தடை இல்லை. மேலும் ஏற்கனவே இலங்கையில் தரையிறங்கிய விமானங்கள், 12 மணி நேரத்திற்குள்ளாக புறப்பட்டு செல்லவும் தடையில்லை. இந்த தகவலை அந்த நாட்டு விமான ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது கொரோனா 3-வது அலை வீசி வருகிறது. அங்கு வரலாற்றில் இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1051 பேர் மரணம் அடைந்துள்ளனர்.