இனியும் மக்கள் அலட்சியமாக செயற்பட இடமளிக்க முடியாது : இராணுவத் தளபதி
05 May,2021
எத்தகைய நெருக்கடி நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மிக மோசமானதொரு காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம். சுகாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே அனைத்து செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறையில் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரடியான வழிகாட்டல்களையும் தேவையான பணிப்புரைகளையும் அன்றாடம் வழங்கி வருகிறார். அனைத்து நடவடிக்கைகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதோடு வைரஸ் தொற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
சுகாதாரத்துறை, சிகிச்சை செயற்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தினமும் பாரிய செலவுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இலவசமாகவே மேற்கொள்ளப்படுவதுடன் தினமும் மில்லியன் கணக்கான நிதி அதற்காக செலவிடப்பட்டு வருகிறது.
திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் மிக வேகமாக பரவும் நிலையை காண முடிகிறது. விரைவாக வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாலேயே நிலைமையை கட்டுப்படுத்த முடிகிறது. அதே போன்று பாதுகாப்பு படையினர், பொலிசார் உள்ளிட்டவர்களும் தம்மையும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நாட்டு மக்களையும் பாதுகாப்பதில் 24 மணித்தியாலங்களும் கடும் உழைப்பை மேற்கொள்கின்றனர்.
அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பை நாம் எளிதாக கருத முடியாது.
திருமண நிகழ்வுகளை தடை செய்துள்ள நிலையில் சிலர் வீடுகளில் விருந்து விருந்துபசாரங்களை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இந்தக் காலம் அதற்கு பொருத்தமான காலம் அல்ல. மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.
அவ்வாறான நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனியும் மக்கள் அலட்சியமாக செயற்பட இடமளிக்க முடியாது.
நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியது போன்று இக்கட்டான இந்த காலகட்டங்களில் எதையும் உதாசீனம் செய்யாது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.