இந்தியாவில் நடிகர் விவேக்கிற்கு ஏற்றிய அதே ஊசி? இலங்கையில் மூவர் உயிரிழப்பு; பெரும் பதற்றம்!
21 Apr,2021
இலங்கையில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஆறு பேருக்கு கடுமையான இரத்த உரைவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வனியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கொவிட் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தடுப்பூசியாக வழங்கப்படும் அஸ்ட்ராஜெனெகா வழங்குவதை அரசாங்கம் நிறுத்தவில்லை. இதன் இரண்டாம் கட்டம் மே முதல் வாரத்தில் ஆரம்பமாகி தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மாத்திரமல்ல எந்ததொரு தடுப்பூசியை ஏற்றுக்கொண்டாலும் அதன் காரணமாக ஒரு சில பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விடயமாகும்.
தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் காரணமாக ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு இடமிருப்பதுடன் எப்போதாவது மரண நிலைமையும் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றி சில வாரங்களுக்குள் இரத்தம் உறைதல் நோயாளர்கள் சில நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலும் அவ்வாறான 6 சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 3 பேர் மரணித்துள்ளனர். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவு நோய்கள் தொடர்பான குழுவின் நிலைப்பாட்டின் பிரகாரம் இரத்தத்தில் உராய்வுக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மில்லியனுக்கு 4 பேருக்கு என்றவகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
இருந்தபோதும் கொரோனா வைரஸுக்காக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பும் அனுமதித்திருக்கின்றது. இருந்தபோதும் அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தடுப்பூசி ஏற்றியதன் பின்னர் ஏதாவது பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அதுதொடர்பாக முறையிட 24 மணி நேரம் செயற்படும் 0113415985 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.
இவ்வாறான நோயாளர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் அவர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தப்படுகின்றது.
குறிப்பாக தடுப்பூசி ஏற்றி 4 தினங்களுக்கு பின்னர் தொண்டை நோவு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கால்களில் கடும் நோவு இருந்தால் மருத்துவ சிகிச்சைக்காக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். மேலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 50 வீதமனவை எழுந்த மாறாக மேற்கொள்ளப்பட்டவையாகும். அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்கு வருபவர்களிடம் எழுந்த மாறாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
அதேபோன்று பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நிலையத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500 க்கும் இரண்டாயிரத்துக்கும் இடைப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.