கொழும்பில் உள்ள முக்கியமான கல்வி நிறுவனம் ஒன்றின் அதிகாரி தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாகக் கூறி, தமிழ் பெண் ஒருவர் பம்பலபிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான செய்தி இலங்கையின் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
கொழும்பில் உள்ள பிரபல்யமான கல்வி நிறுவனத்தில் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது பிரத்தியோகச் செயலாளராகக் கடமையாற்றும் தமிழ்ப் பெண்ணை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்தப் பெண் 10.02.2021 அன்று பம்பலப்பிட்டி காவல்நிலையத்தில முறைப்பாடு செய்துள்ளார்.(Complaint number WCCB 239/33)
இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) அவர் இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.( Complaint number CWB-CIB V 389/40)
இந்த முறைப்பாடு தொடர்பாக இலங்கையின் தமிழ் ஆங்கில ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்திருந்தன.
குறிப்பாக தமிழ் பெண்களை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்ற வழக்கத்தை குறிப்பிட்ட அந்தப் பெரும்பாண்மை இன அதிகாரி தனதாகக் கொண்டு வருவதாக வெளியாகி இருந்த அந்தச் செய்திகள் பற்றிய தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்தன.
தன் கீழ் பணியாற்றும் தமிழ் பெண்களை தகாத உறவுக்கு நிர்பந்திப்பதாகவும், முரண்டுபிடித்தால் ‘உன்னை புலி என்று கூறி பொலிசில் பிடித்துக்கொடுப்பேன் ‘ என்று அந்த அதிகாரி மிரட்டியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
2020ம் ஆண்டு செப்டெம்பரில் குளிர் பானத்தில் எதனயோ கலந்து கொடுத்து, மயக்க நிலையை ஏற்படுத்தி தகாத உறவுக்கு முயற்சி செய்தபோது, வீறிட்டு கத்தி, ஊழியர்களை அழைத்து அந்த அதிகாரியிடமிருந்து தப்பியோடியிருந்தாள்.
தற்போது நீதிவேண்டி Bambalapitiya போலீசிலும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women and Child Bureau of Sri Lanka) முறைப்பாட்டை செய்துள்ளார் அந்தப் பெண்.
இந்த விடயம் தொடர்பாக 10.02.2021 இன்று பம்பலப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், இன்றுவரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக விசாரணைகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர் தமிழ் பெண் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் வழமைபோலவே இழுத்தடிப்புக்கள் நடக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
அதேவேளை, குற்றம் சுமத்தப்பட்ட உயரதிகாரியின் கருத்துக்களைக் கேட்பதற்காக அவரைத் தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றபோதும் எமது அழைப்புக்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. எமது நிருபரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களுக்கும் அவர் பதில் வழங்கவில்லை.
இது இவ்வாறு இருக்க, இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய மற்றொரு தமிழ் பெண்ணுக்கும் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.
தன்னிடம் ஒரு உயரதிகாரி தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும், அதுபற்றி காவல் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்ததாகவும், அவர் எமது நிரூபருக்குத் தெரிவித்தார்.
இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது (Colombo Majestrate Courts -B 81339)
அந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று 23.07.2019 அன்று வெளியிட்ட செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பணிபுரியும் தமிழ் பெண்கள் பெரும்பாண்மையின அதிகாரிகளினால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, அந்த துன்புறுத்தல்கள் பற்றி துணிந்து வெளியே கூறுகின்றவர்கள் மிரட்டப்படுகின்றதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
தெற்கில், குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் பணியாற்றுகின்ற தமிழ் பெண்கள் பலவிதமான துன்புறுத்தலுக்கு இலக்காகிவருகின்ற இந்த நேரத்தில், தமக்கு நடைபெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக துணிந்து குரல் எழுப்பியுள்ள இந்த பெண்களை பாராட்டுகின்ற அதேவேளை, பாதிப்புக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அதிகாரங்கள் வழிசமைக்கவேண்டும் என்றும் கோரி நிற்கின்றோம்.