ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவரும் பெண் சந்தேக நபராகிய புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜாஸ்மின் ஸ்ரீலங்காவுக்கு மீண்டும் வந்திருப்பதாக வெளியாக தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருடன் ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவு வினவியது.
அதன் போது புலஸ்தினி மகேந்திரன் என்கிற சாரா ஜாஸ்மின் சார்ந்த தகவல்கள் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இருப்பதாகவும், அவர் ஸ்ரீலங்காவிற்கு இரகசியமான முறையில் வந்து சென்றமை குறித்த விவகாரம் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பதிலளித்தார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து கைதாகி அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பலரிடமும் சாரா ஜாஸ்மின் கலந்துரையாடியிருக்கின்ற தகவலும் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கும், மேலும் பல பாடசாலைகள் மற்றும் மக்கள் அதிகமாக நடமாடுகின்ற இடங்களுக்கும் தாக்குதல்களை நடத்தப்போவதாக எச்சரிப்புக் கடிதமொன்று கடந்த வாரம் இனந்தெரியாத நபரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதுசார்ந்த விசாரணைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே சாரா ஜாஸ்மின் மீண்டும் ஸ்ரீலங்காவிற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கும் புலஸ்தினி சென்றிருப்பதாக பிரதான ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
2019ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்தாரிகள் குழுவில் இருந்த சாரா ஜாஸ்மின் என்கிற பெண் சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ அவரை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இருந்த போதிலும் பொதுபலசேனா உட்பட தென்னிலங்கை அமைப்புக்கள், அவரை நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணை செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் சாரா ஜாஸ்மின், ஸ்ரீலங்காவிற்கு கடல்மார்க்கமாக இரகசியமான முறையில் விஜயம் செய்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து படகு மூலமாக அவர் இந்தியா சென்றுள்ளதுடன், படகு மூலமாகவே அவர் மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு வந்து, மூன்று இடங்களில் தங்கியிருப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது