வடக்கு பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை- மியன்மாரைப் போன்றே இலங்கையும் செயற்படுகிறது: லக்ஸ்மன்
17 Feb,2021
பேரணியொன்றை முன்னிலைப்படுத்தி வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமலும் அரசாங்கம் நடந்துகொள்ளவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதன்படி, மியன்மாரின் செயற்பாடுகளைப் பின்பற்றியே இலங்கை அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிப்படைந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாடுகளைவிட்டு வெளியேறுவார்களாயின் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் உருவாகுவதற்கே அது வாய்ப்பளிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவைப் பயன்படுத்தி தென்பகுதி அரசியல் தலைவர்களை அடக்க முயற்சிக்கும் அரசாங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கு செவிசாய்க்காமல் அவர்களுக்கு எதிராக செயற்படுவதன் மூலம் அவர்களையும் அடக்கிவைக்க முயற்சிக்கின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உரையாடல்களின்போது தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களின் கருத்துகளை தெரிவிப்பதற்கு ஆளும் தரப்பினர் இடமளிப்பதில்லை எனவும் இத்தகைய செயற்பாடுகள் காரணமாக இவர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியில் சென்றால், பயங்கரவாதிகளுடனே இணைந்துகொள்வார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்ப காலங்களில் இருந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளின் காரணமாக 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டிருந்தது என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் அரசாங்கத்தின் போக்கானது மியன்மார் நாட்டின் செயற்பாடுகளைப் போன்றே அமையப் பெற்றுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.