மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றது – முன்னாள் சபாநாயகர் கவலை
28 Jan,2021
தற்போதைய ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் உருவாகி வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்திற்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது.
குறித்த விடயத்தினை அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால் தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன, மத உரிமைகளை பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டிற்குள் உருவாவது உறுதி. அவ்வாறு எதுவும் நடந்துவிடக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன்.
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கும் சமூகத்தில் மக்கள் வாழ வேண்டும். ஒருவரது அடிப்படை உரிமையை தடுக்கும் உரிமை எவருக்கும் வழங்க முடியாது. ஆனால் இன்று மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை தகவல் அறியும் சட்டத்தையும் மீண்டும் தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதுகூட மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.
மேலும் 20ஆம் திருத்தத்தின் பிரதிபலிப்பே இவையாகும். நாம் ஒருபோதும் 20 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தனி நபருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்து இந்த நாட்டு மக்கள் அனைவரதும் உரிமையை ஒரு நபர் தீர்மானிக்கும் செயற்பாடே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஒருவர் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே நினைக்கிறேன்.
எனவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அரசியல் அமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசியல் அமைப்பில் பாதுகாக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்