தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்- டக்ளஸ்
26 Jan,2021
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்க கூடாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்திலேயே குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
அத்துடன் பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒருங்கிணைப்பு முன்னாய்த்தக் கூட்டத்தில் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.