இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்: சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்
17 Jan,2021
இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தமிழ் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் உலுக்கிய இந்த இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கைக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் வகையில் இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 15-ந்தேதி அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘இலங்கை இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை பொறிமுறையை உருவாக்க வேண்டும். குறிப்பாக சிரியாவில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ஆதார சேகரிப்பு பொறிமுறையை உருவாக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு உறுதியான காலவரையறை வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக ஓராண்டுக்குள் இந்த விசாரணையை முடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், இந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பு ஏற்கச்செய்யும் வகையில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.