கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை- இராணுவ அதிகாரிகள் நியமனம்!
01 Jan,2021
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை வலுவூட்டும் நோக்கில், 25 மாவட்டங்களுக்கும் மாவட்ட இணைப்பதிகாரிகளாக, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை வலுவூட்டும் நோக்கில், 25 மாவட்டங்களுக்கும் மாவட்ட இணைப்பதிகாரிகளாக, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவசர தேவையை கருத்திற்கொண்டு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான, ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்றையதினம் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கப்பட்டன.
கொவிட்-19 பரவல் காரணமாக, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறித்த அதிகாரிகள் ஈடுபடுவர்.
அத்துடன் கொவிட்-19 நிலை மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்ட நோய்களின் கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், அதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய அவசர நிலைமைகளின்போதான தேவைகளை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு, ஜனாதிபதி செயலகம், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடனான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பொறுப்புகள், ஜனாதிபதி செயலகத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.