இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை
20 Dec,2020
இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை மாறாக மதவிழுமியங்களை அடிப்படையாக கொண்டுவாழும் சமூகமே நாட்டிற்கு தேவை – பிரதமர் மகிந்த ராஜபக்ச
இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை மாறாக மதவிழுமியங்களை அடிப்படையாக கொண்டுவாழும் சமூகமே நாட்டிற்கு தேவை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மதவிழுமியங்களை வளர்த்தெடுப்பதும் மதங்களுடன் தொடர்புடைய இடங்களை அபிவிருத்தி செய்வதுமே எங்கள் கடமையும் பொறுப்புமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு அவசியமற்றது என்னவென்றால் மதச்சார்பற்ற தேசமே,மதங்கள் தேவையில்லை என கடந்தகாலங்களில் தெரிவித்தவர்களிற்கு சிறந்த பதில் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மதவிழுமியங்களின் அடிப்படையில் வாழும் சமூகமே எங்களிற்கு தேவை மதவிழுமியங்களை பாதுகாப்பதன் மூலமே அவ்வாறான சமூகங்களை உருவாக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுக்க தவறமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நெருக்கடியான தருணத்திலும் கத்தோலிக்க சமூகம் அன்பின் செய்தியை பாதுகாக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னர் கத்தோலிக்க சமூகம் நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றாமல் பொறுமையை கடைப்பிடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கத்தோலிக்க சமூகத்தின் உறுப்பினர்கள் சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றிய விதம் குறித்து நான்மகிழச்சி அடைகின்றேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்