எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை வரும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, எம்.சீ.சீ. கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் என்ன என்பதை விசாரிக்க உள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நேற்றைய தினம் (25) தனது டுவிட்டர் பக்கத்தில் விமானத்தில் ஏறும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதுடன், மேலும் சில தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டது .
அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளை கொண்ட, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் என்ன என்பது தொடர்பிலும். இதனை தவிர மேலும் மூன்று பிரதான விடயங்கள் குறித்து பொம்பியோ, இலங்கை அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் இலங்கை – அமெரிக்க படையினருக்கு இடையிலான பயிற்சி வேலைத்திட்டங்கள், இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் இலங்கைக்குள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இலங்கை வரும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சில மணி நேரங்கள் மாத்திரமே இலங்கையில் தங்கி இருப்பார். அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆந் திகதி மாலை அப்போதைய வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டு இருதரப்பு சார்ந்த ஆர்வமுள்ள விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவிட் தொற்றுநோயின் போதான அமெரிக்க – இலங்கை ஒத்துழைப்பு, அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை விநியோகித்தல், இலங்கைக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையளித்தல் மற்றும் கோவிட் தொடர்பான 5.8 மில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு உதவி, பொருளாதார மீட்பு முன்முயற்சிகள், காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
மேலும் எம்.சி.சி. ஒப்பந்தத்தின் மீளாய்வு அறிக்கை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியன குறித்தும் அந்த கலந்துரையாடலில் அமெரிக்க செயலாளருக்கு விளக்கமளித்த அமைச்சர் குணவர்தன, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற செயன்முறைகளுக்கு அளித்த ஆதரவுகளுக்காக அமெரிக்காவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகூறத்தக்கது,
இப்பயணத்தின் போது, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.