ரிசாத் கைது விவகாரம் - நரித்தனமான நாடகம்
17 Oct,2020
ரிசார்ட் பதியூதீனை கைது செய்ய முடியாத சம்பவம் மட்டுமல்லாது இதற்கு முன்னர் இதே விதமாக ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன போன்றோரை கைது செய்ய முடியாமல் போனமை என்பது நாட்டுக்கு வழங்கும் நகைச்சுவை என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இவ்விதமாக தொடர்ந்தும் சென்றால், கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியூதீனை கடந்த மூன்று நாட்களாக கைது செய்ய பொலிஸார் தேடி வருவது குறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆறு பொலிஸ் குழுக்களை தேட மற்றுமொரு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது நரித்தனமான நாடகம். ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன போன்றோரின் விடயத்திலும் இதுதான் நடந்தது.
யாருக்கு நகைச்சுவையை வழங்குகின்றனர்?. எமது நாட்டு மக்களுக்காக?. இவை தொடர்ந்தும் நடைபெற்றால் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே எமக்கும் ஏற்படுக் கூடும்.
எனினும் கூற வேண்டியதை, ஆதரிக்க வேண்டியதை,எதிர்க்க வேண்டியதை மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய அந்த நேரத்தில் மேற்கொள்வோம் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்