பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த நச்சுக் கழிவுகள்: 21 கன்டெய்னர்களில் மறு ஏற்றுமதி
28 Sep,2020
பிரிட்டனில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் எனும் பெயரில் வந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அடங்கிய 21 கன்டெய்னர்களை திருப்பி அனுப்பி இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றால் பிரிட்டனில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கன்டெய்னர்களில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே அந்த கன்டெய்னர்களில் இருந்திருக்க வேண்டும்.
அவற்றில் சிறிய அளவு மட்டுமே பிரிட்டனுக்கும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.
பெரும்பாலான கன்டெய்னர்கள் இலங்கையிலுள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.
2018ம் ஆண்டு, உயிராபத்தை விளைவிக்கும் அந்த அந்த நச்சுப் பொருட்கள் இருந்த கன்டெய்னர்களை அதிகாரிகள் கைப்பற்றிய பின்பு இலங்கை அரசால் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அதன்படி நேற்று சனிக்கிழமை அவ்வாறு இருபத்தியோரு கண்டவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின், கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி விதிகளை மீறியது என்று இலங்கை சுங்கத் துறையின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுவதை தடுக்க தாங்களும் உறுதி பூண்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது.
முறையான விசாரணையை தொடங்கும் நோக்கில் இலங்கை அதிகாரிகளிடம் மேலதிக தகவல்களை கேட்டுள்ளதாக அந்த முகமையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் ஜனவரியில் பிரிட்டனிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 42 கன்டெய்னர்களில் இருந்த பிளாஸ்டிக்கை மலேசியா பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.