எண்ணெய் கப்பலில் தீ விபத்து: கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்
18 Sep,2020
குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3-ந் தேதி இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இலங்கை கடல் படை, விமானப்படை, இந்திய கடல் படை, கடலோர காவல் படை என பல்வேறு தரப்பினரும் இணைந்து பல நாட்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே எண்ணெய் கப்பல் தீ விபத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு கொழும்புவில் உள்ள கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான செலவினங்களுக்காக 1.8 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடியே 25 லட்சத்து 43 ஆயிரம்) அரசுக்கு கப்பல் நிறுவனம் வழங்க வேண்டும் என அரசு வக்கீல் கோரினார். அத்துடன் கடல் மாசுபாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கப்பலின் கேப்டன் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நியூ டைமண்ட் கப்பலின் கேப்டன் வருகிற 28-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக கொழும்பு கோர்ட்டு சார்பில் கப்பலின் கேப்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.