20 ஆவது திருத்தம் -. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை!
14 Sep,2020
அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலை எழுப்பியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 45வதுஅமர்வில் ஆரம்ப உரையை ஆற்றிய அவர், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டார்.
30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீள பெற்றமை காரணமாக பிற முன்னேற்றங்களுக்கிடையில், அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என மிச்சேல் பச்செலெட் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத கொலைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜெண்டிற்கு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் பதவிகளில் அமர்த்தப்படுத்தல் போன்றவற்றினையும் மிச்சேல் பச்செலெட் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய குற்றங்களின் விசாரணையைத் தடுக்க பொலிஸ் மற்றும் நீதித்துறைக்குள் தலையிடுவதானது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றினையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மிச்சேல் பச்செலெட் வலியுறுத்தினார்.
எனவே அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என மிச்சேல் பச்செலெட் குறிப்பிட்டார்.