பிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளது- ஹரின் கேள்வி
08 Sep,2020
பிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாடாளுமன்ற அமர்வில் ஹரின் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளதாவது, “பிரேமலால் ஜயசேகரவுடன், எமக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
அரசியலமைப்பிலேயே குற்றவாளியொருவருக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதியில்லாத நிலையில், இவருக்கு மட்டும் எவ்வாறு இந்த சலுகை வழங்கப்பட்டது.
அப்படியென்றால், மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு வாரம் தோறும் அவர்களின் வீடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.