இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட மிகப்பெரிய தீயை அணைக்க இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.
இதன்படி சம்பவ பகுதிக்கு சென்ற இந்திய கடலோர காவல் படை, கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் 19 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒருவர் காணவில்லை. கேப்டனும் மேலும் ஒரு ஊழியரும் கப்பலிலேயே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
MT NEW DIAMOND என்ற அந்த கப்பலில் 2 லட்சம் டன் அளவிலான சரக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த கப்பலில் குவைத்தில் இருந்து கச்சா எண்ணெய் இருப்பதாகவும் தகவல் உள்ளது.
இந்த நிலையில், கிழக்கு இலங்கை கடல் பகுதியின் 38 கடல் மைல் தூரத்தில் பயணம் செய்தபோது அந்த கப்பலில் தீ பற்றி எரியத்தொடங்கியதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இண்டிக டி சில்வா கூறுகையில், கப்பலின் எஞ்சின் பகுதியில் முதலில் தீ பற்றி எரியத்தொடங்கியதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர ஊழியர்கள் முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய கடற்படை முகாம்களிலிருந்து இரண்டு கப்பல்கள் தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, கப்பலில் தீ பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச் கிராவ்ட் கண்காணிப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகிறது.
இதற்கிடையே, இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐசிஜி ஷெளர்யா, சாரங், சமுத்ர பஹெரெடர் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் தீயை அணைக்கும் பணிக்கு உதவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல, இலங்கை கடற்படையின் ராணரிசி கப்பலும் தீ விபத்துக்குள்ளான கப்பல் இருந்த பகுதியை அடைந்துள்ளதாகவும், அதில் இருந்த ஊழியர்கள், மாலுமிகள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த கப்பலில் இருந்த ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கப்பலின் புறப்பாடு குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி புறப்பட்ட கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5ஆம் தேதி அடையும் திட்டத்துடன் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
20 ஆண்டுகள் பழமையான அந்த கப்பல், பனாமா நாட்டு தேசிய கொடியுடன் வந்தாக இந்திய கடற்படை உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.