தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு விமான நிலையத்தை திறக்க திட்டம்
20 Aug,2020
தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதம் முதல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைத் தவிர்த்து, கொரோனா அச்சுறுத்தல் இல்லாத நாடுகளுக்கே அனுமதி வழங்கப்படவுள்ளது.
எனினும் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் திகதி குறித்து இன்னமும் அரசு உறுதியான தீர்மானத்துக்கு வரவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. விமான நிலையத்தை மீண்டும் திறப்பது மற்றும் எந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பது என்பது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.