ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி
14 Aug,2020
இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.
கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமான் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 109,155 அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் 22,218 வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39,321 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2018 அக்டோபர் 26 இல் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக அறிவித்தார்.
இதனை அடுத்து ராஜபக்ஷ தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஷவின் தெரிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் 2018 நவம்பர் 2 இல் ராஜபக்ஷவின் அமைச்சரவையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.