கடற்றொழில் அமைச்சர் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்
14 Aug,2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.
அதனடிப்படையில், நேற்று (12.08.2020) தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கி வைத்தார்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது