ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
28 Jul,2020
ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா காரணமாக தொழிலை இழந்த நிலையில், இலங்கை பணியாளர்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், தம்மை இலங்கைகு திருப்பி அனுப்புமாறு அவர்கள் கோரி வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் பணியாளர்களுடன் கலந்துரையாட சென்றுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை வழங்கவில்லை என தெரிவித்து பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கிட்டத்தட்ட 340 இலங்கை தொழிலாளர்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஏற்பட்ட அமைதியின்னையைக் கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் மங்கள ராண்டேனியா, தொற்றுநோயால் வேலை இழந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக தாங்கள் விடுதிகளில் சிக்கியிருப்பதால் தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தூதரக அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறும்போது ஒரு தவறான புரிதலின் விளைவாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இலங்கைத் தொழிலாளர்களின் தவறான நடத்தை காரணமாக எழுந்த நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.