எமது நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு எம்மால் மட்டுமே கொண்டுவர முடியும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, நாடு படுமோசமான நிலையை நோக்கி பயணிப்பதாகவும் கூறினார்.
புத்தளம் நகரில் நேற்று (19) இரவு ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் கல்வி அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு உட்பட ஐக்கிய தேசியக்கட்சி சார்பில புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆத்துடன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரும் முககவசம் அணிந்து, கைகளை கழுவி சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பித்திருந்தனர்.
இங்கு தொடர்ந்தும் பேசிய முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில், 2001 ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது இந்த நாட்டில் பொருளாதாரம் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்டது.
அதுபோன்று 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது எமது நாடு கடன் சுமையால் இருந்த போதிலும் நாம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை 10ஆயிரம் ரூபா அதிகரித்துக்கொடுத்ததோடு, பொதுமக்களுக்கும் பல சலுகைகளை வழங்கினோம்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்து காணப்பட்டது. பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எமது நாடு எதிர்கொண்டது. எனினும் எமது அயராத முயற்சியால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பழைய நிலைமைக்கு எமது நாட்டை மீண்டும் கொண்டுவந்தோம்.
எனவே, இப்போது நாடு மிகவும் மோசமான நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் மாத்திரமே இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என பொறுப்புணர்வோடு கூறிக்கொள்கிறேன்.
இன்று பல தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர். கைத்தொழில், சுற்றுலாத்துறை உள்ளிட்ட வர்த்த நடவடிக்கைகளில் எமது நாடு பாரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஏற்றுமதிகள் இல்லை.
இதனால் மில்லியன் கணக்கில் எமது நாடு நட்டங்களை எதிர்நோக்கியுள்ளது. இன்றும் இந்த நாடு கடன் சுமையால் உள்ள போது நாட்டை எப்படி வளப்படுத்தப் போகிறார்கள். இந்த நாட்டு மக்களுக்கு எப்படி சலுகைகளை வழஙக்கப் போகிறார்கள்.
இன்று இந்த நாட்டில் வாழும் மக்களும் கடன் சுமையால் அவதிப்படுகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இலங்கை சனத்தொகையில் பாரிய விருத்தி காணப்படும். இந்த நிலையில், பொருளாதாரத்திலும் எமது நாடு தன்னிறைவு பெற வேண்டும்.
ஏற்கனவே பொருளாதார ரீதியில் பின்னோக்கி காணப்பட்ட எமது நாட்டை நாம்தான் வளப்படுத்தினோம். அதுபோல மீண்டும் ஆட்சியை எமக்கு வழங்கினால் மீண்டும்; பழைய நிலைக்கு இந்த நாட்டை கொண்டுவர முடியும்.