ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார்: இலங்கை அரசு
19 Jul,2020
உலகின் முதல் விமானி ராவணன்தான் என்பதை நிரூபிக்க தங்களிடம் ஆதாரம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இலங்கை அரசு விளம்பரம் செய்துள்ளன.
ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார்: இலங்கை அரசு
ராவணன்
ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக ராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராமர் ராணவனுடன் சண்டையிட்டு சீதையை மீட்பதாக புராணம் கூறுகிறது.
இலங்கை அரசு ராவணன்தான் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தினார். அவர்தான் உலகின் முதல் விமானி என்று கூறி வருகிறது.
இந்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ராவணன்தான் முதல் விமானி. இதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், அந்த விளம்பரத்தில் ‘‘மன்னர் ராவணன் தொடர்பான டாக்குமென்ட் அல்லது புத்தகம் இருந்தால் அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். புராண மன்னர் மற்றும் தீவு நாட்டின் விமான ஆதிக்கத்தின் இழந்த பாரம்பரியம் ஆகியவற்றை குறித்து அரசு லட்சிய, ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. அதற்கு உதவிகரமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே நியூஸ் 18-க்கு கொடுத்துள்ள பேட்டியில் ‘‘மன்னர் ராவணன் ஒரு மேதை. ஆகாயத்தில் பறந்த முதல் நபர் அவர்தான். அவர் ஒரு விமானி. இது ஒரு புராணக்கதை அல்ல. அது உண்மை. இதுகுறித்து விளக்கமான ஆராய்ச்சி தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம்’’ என்றார்.
இந்தியாவில் உள்ள பதிப்பில் சீதாவை ராவணன் கடத்தியதாக சொல்லப்படுகிறது. அது தவறு. அவர் ஒரு உன்னத மன்னர் என்று இலங்கை தெரிவிக்கிறது.