பெருமளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த உலகத் தொற்றில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இலங்கையில் மீண்டும் இந்த தொற்று தலை தூக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்திலுள்ள 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஊழியர்கள் என 450 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாரவில பகுதியிலுள்ள பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
மேலே குறிப்பிட்ட அந்தப் பெண் கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றும் ஒருவர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, சுமார் 3 மாத காலம் கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளானோர் கடந்த சில மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலையில், தற்போது சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிக்கின்றது.
அதேவேளை, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வெளிநபர்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
சிறைச்சாலைகளிலுள்ள 204 கைதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமை
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 151 என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 161 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், 1979 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.