வெலிக்கடைக்குள் புகுந்தது கொரோனா! - சிறைக் கைதிக்கு தொற்றியதால் பதற்றம்
07 Jul,2020
வெலிக்கடை சிறையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டகாடு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கைதியை தனிமைப்படுத்தி, வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும், கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலும், குறித்த தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், வெலிக்கடைச் சிறைச்சாலையில் இவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 174 பேருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டதாகவும், எனினும் எவருக்கும் தொற்று இருப்பது தெரியவரவில்லை என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், 76 பேருக்கு விரைவில் பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாகவும், சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் சந்தனஎக்க நாயக்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வெலிக்கட சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.