இலங்கையில் கட்டுக்குள் வந்த கொரோனா: 3 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு
07 Jul,2020
இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை தொடர்ந்து அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. இலங்கையில், 2000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 11 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர். அங்கு கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக தளர்த்தப்பட்டு இரவு நேரம் மற்றும் முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு , உள்ளூர் மக்கள் மத்தியில் அங்கு புதிதாக நோய்த்தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் முழு முடக்க கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், இலங்கையில் 115 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கிரேடு 5,11,13 ஆகிய மாணவர்களுக்கான பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
கிரேடு 12 மற்றும் கிரேடு 10 ஆகிய மாணவர்களுக்கு ஜூலை 20 ஆம் தேதியும் ஜூலை 27 ஆம் தேதி முதல் கிரேடு 3,4,6,7,8,9 ஆகிய மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும் என்று இலங்கை அரசின் கூடுதல் செயலர் ரஞ்சித் சந்திரசேகரா தெரிவித்துள்ளார்.
இறுதி கட்டமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி கிரேடு 1 மற்றும் 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.