கனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே?: மகளிர் அணி பரபரப்பு கேள்வி!
28 Jun,2020
நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் போரால் கடுமையாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பிரச்சினைகளால் பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவங்கள் இடம்பெற்றன. பலர் குடும்பங்களோடு தலைமறைவு வாழ்க்கை நடத்துமளவுக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் நுண்நிதிக்கடன்கால் நாளாந்த வருமானத்தை கடனுக்கு செலுத்திவிட்டு வறுமைக்குள் சிக்குண்டிருந்தனர்.
இவ்வாறான மக்களை கடன் சுமையிலிருந்து மீட்கவும் சுய வருமானத்தை கட்டியெழுப்பி அவர்களை வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு கனடாவிலுள்ள புலம் பெயர் ஈழத்தின் அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் இணைந்து தமிழரசுக் கட்சியூடாக 21 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவினை வழங்கியிருந்தனர்.
குறித்த நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மகளிர் கூட்டத்தில் குகதாசன் என்பவரால் கணினி மூலம் வெளிப்படுத்தப்பட்டபோதும் குறித்த நிதி பயன்பாடு குறித்து இன்றுவரை எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பொருளாளர் கனகசபாபதியால் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் வங்கிக் கணக்கு கூற்றுக்களில் குறித்த நிதி வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
நானும் இது குறித்து கேள்வியியை தொடர்ந்து எழுப்பியதன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே குறித்த நிதியினை கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் குறித்த 212 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்றுவரை எந்த உத்தியோக பூர்வத் தகவல்களும் வெளிப்படத்தப்படவில்லை.
நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.
அவ்வாறாயின் குறித்த நிதி எங்கே? அந் நிதியை யார் கையாண்டார்கள்? குறித்த நிதி மோசடி செய்யப்பட்டுவிட்டதா? போன்ற சந்தேகங்கள் காணப்பணுடுகின்றன.
இது குறித்து தமிழரசுக்கட்சி ஊடாக நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம். நிச்சயமாக இது வெளிப்படுத்தப்படும் என்றார்.