ஸ்ரீலங்காவின் அந்நிய செலாவணி தொடர்பில் புதிய அறிக்கை
19 Jun,2020
ஸ்ரீலங்காவிற்கான அந்நிய செலாவணியில் கடந்த வருடத்தின் வருவாயின் முக்கிய ஆதாரமாக “நாட்டின் வீரர்கள்“ என வர்ணிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களே காணப்படுவதாக, தலைநகரில் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2019ஆம் ஆண்டு, புள்ளி விபரங்களின்படி, கடந்த வருடம், வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்காக உழைத்தது 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என, வெரைட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்களாகும்.
இது இலங்கையின் வெளிநாட்டு வருவாயின் பாதிக்கும் மேலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களில் எழுபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணியாற்றுகின்றனர்.
குறிப்பாக குவைத்தில் அதிகளவானவர்கள் பணியாற்றுவதோடு, அந்த எண்ணிக்கை 21.02 சதவீதமாகும்.
உலகெங்கிலும் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் பலமுறை செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்தில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
குவைத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்ளை இலங்கைக்கு அனுப்பியதன் ஊடாக, குவைத் ”இலங்கை மீது குண்டு வீசியதாக” முன்னாள் அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவர் சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த கடந்த மே 25ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சில் ”மிகத் தெளிவாக அந்த நாட்டில் உள்ள எமது கொரோனா தொற்றாளர்களை இங்கு அனுப்பியுள்ளனர். எமது நாடு மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவே விளங்குகின்றது” என தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பிலும், கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்ததுமான அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் அரசியல்வாதிகளும், வெளிநாட்டுத் தொழிலாளர்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.
வெரைட் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, வெளிநாட்டு தொழிலாளர்களில் 20.1 சதவீதம் பேர் கட்டாரிலும், 7.5 சதவீதம் சவுதி அரேபியாவிலும், 16.2 சதவீதம் அமெரிக்காவிலும் பணியாற்றுகின்றனர். 25.1 சதவீதம் பேர் ஏனைய நாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அடுத்ததாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறை அதிக வெளிநாட்டு வருவாயை ஈட்டுகின்றது. சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தத் தொழிற்துறை மூலம் வருமானம் கிடைக்கின்றது.
சுற்றுலாத் துறை 2019ஆம் ஆண்டில் 2 பில்லியன் அமெரிக்க டொர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
இலங்கையின் முன்னணி ஏற்றுமதி பயிர்களில் ஒன்றான தேயிலை, 2019இல் இலங்கையின் முக்கிய அந்நிய செலாவணி வருமானத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே தேயிலை ஏற்றுமதி வருமானமாக பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு போக்குவரத்துத்துறை, 0.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அந்நிய செலாவணி வருவாயை ஈட்டியுள்ளதாக வெரைட் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது