இலங்கை கொழும்பில் பத்தி எழுத்தாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?
16 Jun,2020
கொழும்பு சுதந்திர சதுக்கம் பிரதேசத்தில் பகுதிநேர பத்தி எழுத்தாளரும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான ரஜீவ ஜயவீரவின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
சுதந்திர சதுக்க வளாகத்தில் மரமொன்றிற்கு கீழ் இருந்து இன்று காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு அருகிலிருந்து துப்பாக்கியொன்றும், கடிதமொன்றும் போலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரஜீவ ஜயவீர பெரும்பாலும் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறுகின்றார்.
இந்த சடலம் மீதான நீதவான் விசாரணைகள், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் நடத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
துப்பாக்கி சூட்டினால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜீவ ஜயவீர உயிரிழப்பதற்கு முன்னர் தனது சகோதரருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக நேற்றிரவு தனது சகோதரனுக்கு எஸ்.எம்.எஸ் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள சுகயீனம் காரணமாகவேதான் இவ்வாறான தீர்மானமொன்றை எட்டுவதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், துப்பாக்கியை கொள்வனவு செய்வதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுகொண்டுள்ளதாகவும், கோவிட் 19 தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியை வைப்பிலிட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜீவ ஜயவீரவின் மனைவி வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த சம்பவத்தை தாம் தற்கொலை என கருதுகின்ற போதிலும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ரஜீவ ஜயவீர ட்விட்டர் கணக்கில் அதிகளவில் பதிவேற்றங்களை செய்யும் நபர் என்பதுடன், அவர் உயிரிழந்ததன் பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு செயலிழந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஜீவ ஜயவீர இலங்கையின் பிரபல ஆங்கில இணையத்தளம் உள்ளிட்ட ஊடகங்களுக்கு பகுதிநேர பத்தி எழுத்தாளராக கட்டுரைகளை எழுதுவதுடன், அவர் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.