மழையுடனான வானிலை தொடரும்
08 Jun,2020
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டிற்கு வடகிழக்காக உள்ள கடற்பரப்புகளில்சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானகடற்பரப்புகளிலும்மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.