இலங்கையில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்து!
04 Jun,2020
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பசெலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு போலியான செய்திகள் மற்றும் இணைய ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக பல நாடுகளில் தணிக்கைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மிச்செலே பச்செலெட் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை தங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிருப்தியை வெளியிட்டமைக்காக பத்திரிகை அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பிழையான தகவல்களை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை, பங்களாதேஸ் கம்போடியா சீனா இந்தியா உட்பட பல ஆசியநாடுகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பதில் பொலிஸ்மா அதிபர் கொரோனா வைரஸ் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை விமர்சிப்பவர்கள் அல்லது சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களை கைதுசெய்யப் போவதாக மிரட்டினார்.
போலியான அல்லது தீங்குவிழைவிக்கும் செய்திகளை பரப்புபவர்களையும் கைதுசெய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.
அதிகாரிகளை அல்லது கொள்கைகளை விமர்சிப்பதற்காக கைதுசெய்வது என்பது அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கை என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை பொலிஸிற்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது எனவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.