சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் மாலத்தீவு- ஆயத்தமாகும் விமான நிலையங்கள்
28 May,2020
சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் மாலத்தீவில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் எல்லைகள் மூடப்பட்டு சுற்றுலா நிறுத்தப்பட்டது.
தற்போது வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கிய நிலையில், ஜூலை மாதத்திற்குள் எல்லைகளை திறந்து சுற்றுலாவை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேசமயம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக விமான சேவையை மீண்டும் தொடங்கி சுற்றுலாப் பயணிகளை வரவேற்க மாலத்தீவு தயாராகி வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுகாதாரக் குழுவினர் மூலம் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விமான நிலையங்களில் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. பயணிகளின் தொடக்கூடிய டிராலி உள்ளிட்ட பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தெர்மல் ஸ்கிரீனிங் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடையுடன் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாக வெலானா விமான நிலையம் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் இந்தியாவில் தற்போது சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு இப்போதைக்கு செல்ல முடியாது. ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர், சர்வதேச பயணிகள் விமானங்களை குறிப்பிட்ட அளவிற்கு இயக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியிருக்கிறார். எனவே, விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வெளியாகும் என நம்புவோம்.