இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கேட்ட கோத்தபய ராஜபக்சே
25 May,2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து அறிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, கொரோனாவை கட்டுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார்.
அதற்கு கோத்தபய ராஜபக்சே, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், தங்களது அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்து வருவதால், பின்னர் திரும்ப பெற்றுக்கொள்ளும் முறையில், இந்தியா ரூ.8 ஆயிரத்து 360 கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே ‘சார்க்’ மாநாட்டின்போது, இந்தியாவிடம் கோத்தபய ராஜபக்சே ரூ.3 ஆயிரத்து 40 கோடி கேட்டிருந்தார். அதனுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், இந்திய நிதி உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமான பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடியிடம் கோத்தபய கேட்டுக்கொண்டார்.