முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை..!
20 May,2020
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிலும் அமுனுகம, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஜனாதிபதியினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் கூறினார்.
முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன, சில போராளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் சிலருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும் டிலும் அமுனுகம குறிப்பிட்டார்.
இந்நிலையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள கைதிகளின் நடத்தை குறித்து ஆராய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டிலும் அமுனுகம, முன்னாள் போராளிகள் மட்டுமல்லாமல் மற்ற கைதிகள் விடுதலை தொடர்பாகவும் பரிசீலிக்கப்படுகின்றதாக கூறினார்.
அத்தோடு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி முன்னாள் போராளிகளை சிறையில் வைத்திருப்பது பயனற்றது என்று அரசாங்கம் நம்புவதாகவும் டிலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதனை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் விரைவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.