அனுமதி அளித்தால் 12 மணி நேரத்தில் விமான சேவைகள் ஆரம்பம்!
18 May,2020
சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்தால், அடுத்த 12 மணி நேரத்தில் அனைத்து விமான சேவைகளையும் ஆரம்பிக்க, அரசாங்கம் தயாராக இருப்பதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரானா தொற்று பரவலினால், வெளிநாடுகளுக்கான வழக்கமான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், வழக்கமான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து,கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“நிலைமைகள் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் இப்போது பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பில்லை.
விமான சேவைகளை வழமைக்கு கொண்டு வருவது குறித்து இன்னமும் சரியான திகதி ஒன்று தீர்மானிக்கப்படவில்லை. வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் எம்மால் இன்னமும் சுற்றுலாத்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளது.
அவசர நிலைமைகளில் சேவைகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் ஒரு சில நாடுகளுக்கான விமான சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் சரக்கு விமானங்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிப்பதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.