சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்ய வேண்டும்- ஜனகன்
02 May,2020
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துச் செல்லும் இக்கட்டான சூழ்நிலையில், நீதி விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்,
“இரண்டு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கங்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவித சர்வதேச நியமங்களையோ அல்லது உள்நாட்டு நியமங்களையோ மதிப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்ச நிலையைக் கவனத்திற்கொண்டு, எவ்விதமான நீதித்துறை விசாரணைகளும் இன்றி பல ஆண்டுகளாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கை 2008 ஆண்டில் செய்துகொண்ட மனித உரிமைகள் தொடர்பான 104 உறுதிமொழிகளில் நான்கு சிறைக் கைதிகள் தொடர்பானவை. ஆனால் இந்த நான்கில் எதையும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக வந்த அரசாங்கங்கள் முறையாகக் கையாளவில்லை.
தமிழ் தரப்புகள் 800 இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்று குறிப்பிட்டாலும், 318 பேர் மாத்திரமே அரசியல் கைதிகள் உள்கதாக அரசாங்கம் 2012இல் அறிவித்தது. இவர்களில் ஒரு சிலரே விடுதலை செய்யப்பட்டனர்.
பெரும்பாலானோர் இன்றுவரையும் எந்தவித நீதித்துறை மேலாண்மையோ அல்லது நீதி விசாரணைகளோ இல்லாது சிறைகளில் வாடுகிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாகத் தமிழ் தரப்புகள் இவர்களுடைய விடுதலை தொடர்பாக கோரிக்கைகளை விடுத்துவருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இந்த அரசாங்கங்கள் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.
இன்று பாதுகாப்புத் தரப்பும் இந்தக் கொடிய கொவிட்-19 பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் சிறைக் கூடங்களிலும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே இவ்வாறு பல ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில் இந்த அரசாங்கம் அணுக வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி தண்டனைகள் உறுதிப்படுத்தியவர்களைக் கூட தற்போதைய ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார்.
அதேபோல், குற்றச்சாட்டுகள் இன்றி, வெறும் சந்தேகத்தின் பேரில் மாத்திரம் சிறைவாசம் அனுபவிக்கும் இந்த தமிழ் அரசியல் கைதிகளை குறைந்தபட்சம் பிணையிலாவது விடுதலை செய்ய அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்” என ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.