அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா பரவக் காரணமாக அமையும் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை
02 May,2020
அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸை பரப்புகின்றதில் இராணுவம் மிக முக்கியமான காரணியாக இருக்கின்றதான ஒருநிலை இன்றைக்கு உதயமாகியிருக்கிறது.
இங்குள்ள முப்படைகளுக்கும் கொரோனோ வைரஸ் தாக்கியிருக்கிறது. குறிப்பாக கொரோனா தொற்றில் முப்படைகளிலும் தான் கூடுதலான எண்ணிக்கை காணப்படுகிறது. அந்தத் தொற்று மிக வேகமாக வளர்ந்து கொண்டுவருகிறதென்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம்.
அப்படிப்பட்ட நிலையில் அந்த முப்படைகளையும் தனிமைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமையில் தான் அந்தச் செயற்பாடுகள் அனைத்திற்கும் வடக்கு கிழக்கில் முகாம்களை அமைக்கிறது.
அதுவும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இடங்களில் பொதுக் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.
அதனால் அந்த இடங்களை சூழ வாழும் தமிழ் மக்களுக்கு நோய் பரவக் கூடிய ஆபத்தான நிலைக்கு மக்களைத் தள்ளி விடுகின்ற செயற்பாடாகத் தான் அரசின் இந்த முயற்சிகளை பார்க்கின்றோம்.
ஆயினும் இந்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் தாங்களாவே வந்து பேராடுகின்ற நிலைமையை நாங்கள் காணக் கூடியதாக இருக்கிறது. பல இடங்களிலும் இது தான் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உலகத்திலே கொரோனோவால் பாதிக்கப்பட்டிருக்க கூடிய நாடுகள் அனைத்திலும் சுகாதார பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மருத்துவ பரிவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தான் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு முகங்கொடுத்து அந்த சமூகத்தை பாதுகாக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் இலங்கை போன்ற ஐனாநாயகம் இல்லாத நாடுகளில் தான் இராணுவத்தை முன்னிலைப்படுத்தி அந்ததந்த அரசாங்கங்கள் தமது வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வருகின்றனர்.
இலங்கையில் அதே இராணுவம் இன்றைக்கு கொரோனாவை பரவுகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் கூட அரசாங்கம் இரானுவத்தில் இருந்து பின்வாங்கும் எந்தவொரு நோக்கத்தையும் காட்டியதும் கிடையாது.
ஆகவே இன்றைக்கு தமிழர்கள் நாளைக்கு முஸ்லிம்கள் அதற்கு அடுத்தது நிச்சயமாக சிங்களர்வகள் கூட இதற்கு எதிரான செயற்பாட்டை ஆரம்பிப்பார்கள். குறிப்பாக இந்த அரசின் கண்மூடித்தமான செயற்பாட்டின் காரணத்தின் நிமித்தம் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவ இந்த அரசே தான் வழிவகுக்ககப் போகின்றது என்பதையும் நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்ட விருமம்புகிறோம்” என்றார்.