600 ஐ நெருங்கிய தொற்றாளர்கள் எண்ணிக்கை: 180 பேர் வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள்
28 Apr,2020
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்றிரவு (27) 7.30 மணியாகும் போது 600 ஐ அண்மித்திருந்தது.
இன்றிரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 581 ஆக உயர்ந்தது.
இன்றுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 53 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதான பத்திரண தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான தொற்றாளர்களில் 180 பேர் வெலிசறை கடற்படை முகாமின் கடற்படை வீரர்களாவர் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் கொமாண்டர் ஷவேந்ர சில்வா கூறினார்.
இதேவேளை, இன்றும் அறுவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்றுத் நோய் தடுப்புப் பிரிவு கூறியது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது