ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது- மனோ
18 Apr,2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகளால் வழங்கப்படும் ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் அடைவதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “ஒரு அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தைச் சுற்றியுள்ள நிறுவனங்களான பாதுகாப்புத்துறை உட்பட சம்பந்தப்பட்ட துறைகள் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும்போது முழுமையான ஆதரவை எதிர்க்கட்சி வழங்கும்.
ஆனால், இவ்வாறு எதிர்க் கட்சிகள் வழங்கும் ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் அடைவதற்கு இடமளிக்க முடியாது.
கொரோனாவைக் கொல்லவேண்டும். ஆனால் ஜனநாயகத்தைக் கொல்ல முடியாது. ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரத்தைக் கொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரத்தைக் கொல்ல முடியாது.
இன்று இந்த நாட்டில் இருக்கக்கூடிய 14 ஆயிரம் கிராம சேவக அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைக் கொடுக்கும் செயற்பாட்டில் இருந்து தாங்கள் விலகுவதாக தெரிவித்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன?
இந்த ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசாங்கம் தங்களது கட்சியின் கீழ் மட்ட நகர மற்றும் பிரதேச சபைகளைப் பயன்படுத்தி தங்களது நபர்களுக்கு மாத்திரம் பட்டியலில் பெயரிட்டுக் கொடுத்து அரசியல் இலாபம் பெறுகின்றனர் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்