ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்
11 Apr,2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை!
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவத்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
சுகாதாரத் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவிக்கையில், “காத்தான்குடி கடற்கரை வீதியில் அமையப்பெற்றுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி மற்றும் கிளினிக் ஆகிய சேவைகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடி நகரசபை இந்தக் கட்டடங்களை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
குருதி சுத்திகரிப்பு பிரிவு மற்றும் உள நல மருத்துவப்பிரிவு என்பனவும் நிர்வாக நடவடிக்கையும் தொடர்ந்து காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டடத்திலேயே இயங்குமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள், நகர சபை ஊழியர்கள் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.