தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு
08 Apr,2020
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் அவரவர் வீடுகளில் மீள சுய தனிமைப்படுதலுக்கு உள்ளாகுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று வரை இலங்கையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அல்லது நிலையங்களில் மட்டும் 3415 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தனர்.
இவர்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த அனைவரையும் மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளித்த சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உடற் கூற்று வைத்திய நிபுணர் ஆனந்த விஜேநாயக்க,
‘ இதுவரை தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோருக்கு வெறும் சான்றிதழ் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.
இனி மேல் அந்த காலத்தை நிறைவு செய்யும் அனைவரையும் விஷேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவோம். உட்படுத்தி கொரோனா தொடர்பில் பரிசோதனைகளை செய்து அது குறித்த வைத்திய அறிக்கையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பிய நிலையில் 7 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.